You are here
Home > செந்தூர் செய்திகள் > ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் எதிர்ப்பும், ஆதரவும் –

ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் எதிர்ப்பும், ஆதரவும் –

ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் எதிர்ப்பும், ஆதரவும்
-தினமலர்

துாத்துக்குடி:ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்ததற்கு துாத்துக்குடியில் எதிர்ப்பும் வரவேற்பும் கிளம்பியுள்ளது.துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மே 28 ம் தேதி அரசால் சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஜூன் 22ல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்தது. விசாரணை கடந்த 10ம் தேதி முடிவடைந்தது. ஆலையை மீண்டும் இயங்க அனுமதித்து பசுமை தீர்ப்பாயம் நேற்று தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்புக்கு துாத்துக்குடியில், எதிர்ப்பும் ஆதரவும் எழுந்துள்ளன. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், இந்த தீர்ப்பை வழங்குவதற்கு தீர்ப்பாயத்திற்கு சட்ட வலிமை இல்லை. தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் சட்ட வலிமையோடு வாதாட வேண்டும், என்றார்.போராட்டக்குழுவை சேர்ந்த பாத்திமாபாபு, தெர்மல் ராஜா, விநாயக மூர்த்தி ஆகியோர் எஸ்.பி., முரளி ரம்பாவை சந்தித்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.மேலும் பாதிரியார்கள், மீனவ பிரதிநிதிகளை சந்தித்து எஸ்.பி. ஆலோசனை நடத்தினார்.அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், தீர்ப்பின் முழு விபரம் வந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு ஆதரவாகவே அரசு செயல்படும், என்றார்.கலெக்டர் சந்தீப்நந்துாரி கூறுகையில், தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்படவில்லை. மேல்முறையீடு செய்ய உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். எனவே மக்கள் அமைதி காக்க வேண்டும், என்றார்.தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து இந்து முன்னணி மாநில துணைத்தலைவர், ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தீர்ப்பால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகிடைக்கும். அதே நேரத்தில், துாத்துக்குடியில் வசிக்கும் மக்களின் நலனுக்கு ஆலை நிர்வாகம் உத்தரவாதம் அளிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.துாத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். தீர்ப்பையடுத்து அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, 500 போலீசார், 80 எஸ்.ஐ.,க் கள், 50 இன்ஸ்பெக்டர்கள், 15 டி.எஸ்.பி.,கள், 3 ஏ.டி.எஸ்.பி.,கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக டி.ஐ.ஜி., கபில்குமார் சரத்கர் தெரிவித்தார்.

One thought on “ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் எதிர்ப்பும், ஆதரவும் –

Leave a Reply

Top